கொல்கத்தா: கொரோனா வைரஸ் வேகமாக பரவ இந்திய தேர்தல் ஆணையம் தான் காரணம் என்ற சென்னை உயர்நீதிமன்ற கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களுக்‍கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்‍க தேர்தல் ஆணையம் தவறியதால் தான், கொரோனா தொற்று பெருமளவு அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தெரிவித்தது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வரவேற்பு தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியும், தேர்தல் ஆணையமும் தான் தற்போதைய கொரோனா வைரஸ் தீவிர பரவலுக்‍கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.