மும்பை:
திர்கட்சி தலைவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக போட்டியாளரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட எதிர்கட்சி தலைவர்கள் 22 பேர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் அனைத்து தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்பட பலரிடம் இது குறித்து மம்தா பானர்ஜி ஆலோசனை செய்துள்ளார்.

இன்று டெல்லியில் நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.