கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக மாநிலத்தின் பெயரை பெங்காளி மொழியில் பங்களா என்றும், இந்தியில் பங்கள் என்றும், ஆங்கிலத்தில் பெங்கால் என்றும் மாற்றி அமைக்கும் திட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி கொண்டு வந்தார். ஆனால், இத்திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பார்த்த சாட்டர்ஜி கூறுகையில், ‘‘ மேற்கு வங்கத்தை பெயர் மாற்றம் செய்ய அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பங்களா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் அவ்வாறு அழைக்க முடிவு செய்துள்ளது.

ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி மேற்கு வங்கம் தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு கோரும்’’ என்றார்.

மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் மேம்பாட்டு மையத்தை கொல்கத்தாவில் அமைக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ரூ. 100 கோடியை அந்நிறுவனம முதலீடு செய்து ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என் மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ரூ. 500 கோடி முதலீடு செய்து 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என இன்போசிஸ் கூறியிருந்தது.