குர்கான்:

பாலியல் கொடுமையில் பள்ளி கழிப்பிடத்தில் 2ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் பேருந்து நடத்துனருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

புதுடில்லி குர்கான் பகுதியை சேர்ந்தவர் வருண் தாகூர். இவர் ஒரியன்ட் கிராப்ட் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரதுமன் தாகூர் (வயது 7). இவன் சோனா பகுதியில் உள்ள ரியான் இன்டர்நேஷனல் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் இன்று காலை வருண்தாகூர் வழக்கம் போல் மகனை பள்ளியில் இறக்கிவிட்டுச் சென்றார். காலை 8.30 மணியளவில் கழுத்தில் கத்திகுத்து காயத்துடன் பிரதுமன் தாகூர் பள்ளியின் கழிப்பிறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை சக மாணவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் விரைந்து சென்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாணவரை மீட்டு ஆர்டிமிஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் கழிப்பிடம் அருகே இருந்து ரத்த கறை படிந்த கத்தியை மீட்டுள்ளனர். மேலும், அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் கைப்பற்றினர். ரத்த மாதிரியையும் போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பள்ளி வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள 30 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். இதன் அடிப்படையில் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தோட்டக்காரர், ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவனின் வகுப்பு தோழர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் 40 வயதாகும் பேருந்து நடத்துனர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மாணவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அந்த நடத்துனர் மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த நடத்துனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தகவலறிந்த நூற்றுக்கணக்கான பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவே எனது மகன் சாவுக்கு காரணம் என்று வருண் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.