கொல்கத்தா

ரூ.10 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் மேற்கு வங்க பாஜக தலைவர் ஷ்யாம் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ஆளும் திருணாமுல் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவுக்குத் தாவினர்.  பாஜக வெற்றி பெறும் என்ற எண்ணத்தில் அங்குச் சென்ற திருணாமுல் காங்கிரசாருக்கு அதிர்ச்சி அளிப்பது போல் பாஜக கடும் தோல்வி அடைந்து திருணாமுல் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

அவ்வகையில் பிஸ்னூர் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினரும் மாநில அமைச்சருமான ஷ்யாம் பிரசாத் முகர்ஜி தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குத் தாவினார்.  சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராகச் செயல்பட்டார்.  ஆயினும் மம்தா பானர்ஜி வெற்றி  பெற்று தற்போது மேற்கு வங்க முதல்வராகப் பதவியில் உள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இணைய வழிக் குத்தகையில் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி ரூ.10 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.  இதையொட்டி இவர் மீது வழக்கு பதியப்பட்டு நேற்று காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.  விசாரணை நடத்திய காவல்துறையினர் திடீரென அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இது மேற்கு வங்க பாஜக வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து மேற்கு வங்க பாஜக ஷ்யாம் பிரசாத் முகர்ஜி குற்றமற்றவர் எனவும் இது அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.