கொல்கத்தா

கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கொல்கத்தா பார் கவுன்சில் உச்சநீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான ராஜேஷ் பிந்தல் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.  இவர் தற்போது நாரதா லஞ்ச வழக்கு, மம்தா பானர்ஜியின் தேர்தல் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறார்.   இவர் மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸுக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.  

இதையொட்டி மேற்கு வங்க பார் கவுன்சில் செய்தி தொடர்பாளரும் திருணாமுல் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினருமான அசோக் குமார் தேப் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், “கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் பிந்தல் நாரதா லஞ்ச வழக்கு, மம்தா பானர்ஜியின் தேர்தல் வழக்கு மற்றும் மாநிலத்தில் மருந்துகள் வீணானது குறித்த வழக்குகளை விசாரித்து வருகிறார்.  இந்த வழக்குகளில் அவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்.  குறிப்பாக நாரதா ஊழல் வழக்கில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ அளித்துள்ள மனு முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.   எதிர் தரப்பினரின் குறிப்பாக முதல்வர் மம்தாவின் வாதத்தை நீதிபதி பிந்தால் கருத்தில் கொள்ளவில்லை.    இந்த மனுவில் சிபிஐ தரப்பில் 4 திருணாமுல் காங்கிரஸ் தலைவர்களை  வீட்டுக் காவலில் வைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.    ராஜேஷ் பிந்தலின் இந்த போக்கைக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் உள்ள சில நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்,

முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் வழக்கு மனு நீதிபதி கவுசிக் நந்தாவிடம் விசாரணைக்கு அளிக்கப்பட்டுள்ளது.  வழக்கமாக இது போன்ற மனுக்களைத் தலைமை நீதிபதி அல்லது தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்போர் மட்டுமே விசாரிப்பது வழக்கமாகும்.   மேலும் இந்த வழக்கு தற்போது தன்னை பாஜகவின் ஆதரவாளராகக் காட்டிக் கொள்ளும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே இது போல் ஒரு தலை பட்சமாக நடக்கும் நீதிபதியால் உண்மையான நீதியை வழங்க முடியாது என இந்த பார் கவுன்சில் கருதுகிறது.  ஆகவே நீதிபதி ராஜேஷ் பிந்தால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பார் கவுன்சில் கோரிக்கை விடுக்கிறது. ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.