சென்னை: அடையார் நதியை அழகுபடுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு கோட்டூர்புரம் பூங்காவில் பல மரங்கள் வெட்டப்பட்டன. இச்செயலால், வழக்கமாக நடைப்பயிற்சி செய்வோர், மரங்களை நேசிப்பவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ஒரே ஒரு நடவடிக்கையில், நீர்வளத் துறை (WRD) அதிகாரிகள் கிட்டத்தட்ட நூறு மரங்களை வெட்டியுள்ளனர், அதுவும் அரிய இன மரங்கள், என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
மரங்களுடன், கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறின் கரையில், பூங்காவில் நடப்பட்ட புதர்கள் சுத்தம் செய்யப்பட்டு ஒரு கட்டையும் மதில் சுவரும் எழுப்பப்படவுள்ளன. அந்தப் பகுதியில் குடியிருப்போர் மற்றும் ’நிழல்’ அமைப்பின் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலான கடின உழைப்பு அழிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
கோட்டூர்புரம் பூங்காவை பசுமையாக்குதலில் ஈடுபட்டுள்ள ‘நிழல்‘ நிறுவனர் ஷோபா மேனன், பல அரிய வகை மரங்களையும் சேர்த்து வெட்டியுள்ளது குறித்து மிகவும் வருந்தினார். “சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளையின் (சி.ஆர்.ஆர்.டி) அதிகாரிகள் எட்டு மாதங்களுக்கு முன்பு குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் நதி அழகுபடுத்தல் குறித்து ஒரு சந்திப்பை நடத்தியபோது, மரங்கள் மற்றும் புதர்களை எப்பாடு பட்டாவது பாதுகாக்க வேண்டியதன் அவசியம், , அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது, அவர்கள் எங்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள்“, என்று அவர் நினைவு கூர்ந்தார்.
பூங்காவிற்கு விஜயம் செய்தபோது சுமார் 500 மீ தூரத்திற்கு மரங்களும் புதர்களும் வெட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
சி.ஆர்.ஆர்.டி.யின் வேண்டுகோளின் அடிப்படையில் ‘புதர்கள்’ மட்டுமே அகற்றப்பட்டதாகவும், துறையின் அனுமதியின்றி ஒரு மரம் மட்டுமே ஒப்பந்தக்காரரால் வெட்டப்பட்டதாகவும் WRD யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.