நெட்டிசன்:
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … ஆஸ்திரேலியா
புத்தாண்டே நீ வருக
புதுத்தென்பை நீ தருக
சுற்றி நிற்கும் தொல்லையெலாம்
துரத்தவே நீ வருக
நோய் என்னும் பெயராலே
பேய் ஒன்று வந்ததனால்
காய்தல் உவத்த லின்றி
கலங்கி நின்றார் மக்களெலாம்
வெள்ளம் ஒரு பக்கம்
வெந்தணலோ மறு பக்கம்
உள்ளம் பதை பதைக்க
உழன்று நின்றார் மக்களெலாம்
மதிப்பார்ந்த கலைஞர் பலர்
மண்ணை விட்டுப் போனார்கள்
மதிப்பு மிக்க பெரியோரும்
மண்ணை விட்டுப் போனார்கள்
முதலாளி முடங்கி நின்றார்
தொழிலாளி கலங்கி நின்றார்
விவசாயி உணர் விழந்து
வேதனையைத் தொட்டு நின்றார்
உயிர் காத்த மருத்துவர்கள்
உழைத்து நின்ற செவிலியர்கள்
உயிர் கொடுத்த துயரமது
உளம் உறைந்து நிற்கிறதே
வெடி குண்டு கலாசாரம்
விழுங்கியது பல உயிரை
உடல் சிதறி பலவுடல்கள்
உருக் குலைந்து கிடந்தனவே
கோயில் என்று பார்க்காமல்
குழந்தை என எண்ணாமல்
பாதகரின் ஈனச் செயல்
பதை பதைக்க வைத்ததுவே
துயர் நிறந்த காலமதன்
நினை வகற்ற வந்துவிடு
துன்ப மெனும் இருளதனை
போக்கி நிற்க வந்துவிடு
சாந்தியைக் கொண்டு வா
சமாதானம் கொண்டு வா
சோர்ந்து நாம் போகாமல்
துணிவுதனைக் கொண்டு வா
புது வெளிச்சம் புத்தூக்கம்
எடுத்து நீ வந்துவிடு
புத்தாண்டே உன் வரவால்
புது வாழ்வு மலர்ந்திடட்டும்.