சென்னை: தமிழகத்தில் தமிழகத்தில் காவல்துறையினர்களுக்கு வார விடுமுறை வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னையை தவிர்த்து, அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சட்டம், ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.
காவலர்களுக்கு வார விடுமுறை வேண்டும் என்றும், சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என பல ஆண்டு காலமாக காவல்துறையினர் அரசிடம் அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன், காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க கடந்த உத்தரவிட்டிருந்தார். மேலும், தொடர் வேலைப்பழு காரணமாக மன அழுத்தத்தில் இருந்து காவல்துறையினர் விடுபடும் வகையில், அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது குறித்து தமிழகஅரசு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இதுகுறித்து தமிழகஅரசு ஆய்வு செய்வதாக கூறி வந்தது. ஆனால், வருடங்கள்தான் ஓடியதே தவிர காவல்துறையினருக்கு வார விடுமுறை குறித்தோ, மனஅழுத்தத்தை போக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, லாக்கப் மரணங்கள் உள்பட ஏராளமான புகார்கள் காவல்துறையினர்மீது குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், காவலர்களுக்கு, வார விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, தமிழக சட்டம் – ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அண்மையில் காவல்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, வாரத்தின் 7 நாட்களும் பணி செய்வதால், காவலர்கள் மன உளைச்சலில் தவிப்பதாக சுட்டிக்காட்டிய காவல் அதிகாரிகள், வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு அவசியம் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, டிஜிபி ராஜேஷ்தாஸ் தமிழகஅரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கலாமா என்றும் தமிழகஅரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், சட்டம், ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில், தமிழக காவல் துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என சென்னை தவிர மற்ற மாநகர காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
காவல்துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான வாரவிடுமுறையை தமிழகஅரசு, சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டு அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.