சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, இன்று தலைமை செயலர் தலைமையில் உயர்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் நேற்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரேனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல 29 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இருந்தாலும் அதிகரித்து வரும் பாதிப்பை குறைக்க கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று உயர்அதிகாரிகள், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால், இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.