ஸ்ரீநகர்,
விழாக்களில் உணவுப்பொருட்கள் விரயமாவதை தடுக்கவும், சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.
காஷ்மீர் அரசின் இந்த சிக்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் தொண்டு நிறுவனங்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன.
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் விவரம்:
அழைப்பிதழுடன் பரிசுப் பொருட்கள் கூடாது,
ஒலிப்பெருக்கிகள் பட்டாசுளுக்கு தடை,
திருமணத்திற்கு அழைக்கப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கைக்கும் அரசு கட்டுப்பாடு,
மணமகள் வீட்டார் சார்பில் 500 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்
மணமகன் வீட்டார் அவர்கள் சார்பில் 400 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதி.
நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சிறு சிறு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.
விருந்தில் பரிமாறப்படும் அசைவ மற்றும் சைவ விருந்துகளில் 7 வகைகளுக்கு மேல் இருக்கக்கூடாது
திருமணக்கூடங்களில் இனிப்பு மற்றும் பழக்கடைகள் 2க்கு மேல் இருக்கக்கூடாது.
பொதுவாக விழாக்கள் என்றாலே விருந்துதான் சிறப்பு. ஆனால், அதற்கும் ஆப்பு வைத்துள்ளது காஷ்மீர் அரசு.
பெரும்பாலான செல்வந்தர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போதே அத்துடன் உலர் பழங்கள், பரிசு பொருட்கள் வைத்து கொடுப்பது வழக்கம். இனிமேல் அதுபோன்று அழைப்பிதழ் கொடுக்க முடியாது.
திருமண விழாவில் மாப்பிள்ளை வரும்போது பட்டாசு வெடிப்பது வழக்கம். அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஒலிப்பெருக்கி பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விருந்துகளில் பலவகை உணவுகள் பரிமாறப்படுவதும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ விழாவை நடத்துவதும் நமது இந்தியர்களின் கலாச்சாரம். ஆனால், அதற்கு வேட்டு வைத்துள்ளது காஷ்மீர் அரசு.
ஒருசில அமைப்புகள் காஷ்மீர் அரசின் கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பை வரவேற்று இருந்தாலும், பெரும்பாலானோர் பாரம்பரியமான இந்தியர்களின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த விழாக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை எதிர்த்து வருகின்றனர்.
இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா? வராதா என்பது ஏப்ரல் மாதம்தான் தெரியும்.