சென்னை: சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளிலும் முகக்கவசம் அணிந்து மக்கள் நடமாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் எங்கும் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது. பலி எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவ ஆரம்பித்து இருக்கிறது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்து கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் நாட்டின் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளிலும் முகக்கவசம் அணிந்து மக்கள் நடமாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரும்பாக்கம், புராசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், கோட்டூர்புரம், ஆலந்தூர் மற்றும் போரூர் ஆகிய இடங்களில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளும் முகமூடிகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சென்னை மாநகராட்சி இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.