அவுரங்காபாத்
அவுரங்காபாத் நகரில் கடந்த மாதம் நடந்த கலவரங்களுக்குப் பின் ஃப்ளிப்கார்ட் மூலம் ஆயுதங்கள் வாங்க்கபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
காராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் சில இடங்களில் குறிப்பிட்ட இரு சமுதாயத்தினரின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகின. அதை ஒட்டி இருபிரிவினருக்கும் ஏற்பட்ட மோதல் கடந்த மாதம் 11 மற்றும் 12ஆம் தேதி அன்று கலவரமாக மாறியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இதை ஒட்டி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கலவரப் பகுதிக்கு ஒரு கொரியர் மூலம் வந்த 8 பார்சல்கள் சோதனை இடப்பட்டன. அத்துடன் வேறொரு கொரியர் கம்பெனியின் 18 பார்சல்களும் சோதனை இடப்பட்டன. அதில் 12 வீச்சரிவாள்களும், 16 வெட்டுக் கத்திகளும் கிடைத்தன. இந்த பார்சல்களைப் பெறுவோரை கண்டுபிடித்து அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பார்சல்கள் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. அதில் வீச்சரிவாள்கள் விளையாட்டு பொருட்கள் என்னும் பெயரிலும் வெட்டுக் கத்திகள் சமையலறை உபகரணங்கள் என்னும் பெயரிலும் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “ஒரு பொறுப்பு மிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனம் இவ்வாறு ஆயுத விற்பனை செய்வது கண்டிக்கத் தக்கது. இன்று ஆயுத விற்பனை செய்யும் நிறுவனம் நாளையே போதை மருந்தும் விற்க ஆரம்பிக்கலாம். அல்லது வெடி பொருட்களை விற்கலாம் விரைவில் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த உள்ளூர் கங்கிரஸ் தலைவர், “ஆன்லைன் மூலம் ஆயுதங்கள் விற்பனை செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த நிறுவனத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என கூறி உள்ளார்.
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்க மறுத்துள்ளது.