சென்னை,

திமுகவின் செயற்குழு, பொதுக்குழு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில், அதிமுகவில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டு உள்ளார். அவரது நியமனம் ரத்து செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினகரன் மதுரையில் செய்தியாளர்களுடன் சந்தித்து பேசினார். அப்போது  அவர் வழக்கம்போல சிரித்துக்கொண்டே ஆவேசமாக  கூறியதாவது,

தற்போது சென்னையில் நடைபெற்று வருவது பொதுக்குழு அல்ல பொதுக்கூட்டம் என்று கூறினார்.   பொதுக்குழுவில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது செல்லாது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் நீதி மன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டதுதான்.

கட்சியின் பொதுச்செயலாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றார்.

மேலும்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை  பதவியில் இருந்து இழுத்து கீழே போட வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஆவேசமாக கூறினார்.

ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் இருக்கையில், இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ எங்களால் பார்க்க முடியவில்லை என்றும்,  ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கி விட்டேன் என்றும் அதிரடியாக கூறினார்.

தேர்தல் களத்தில் திமுகவுக்கும், எங்களுக்கும்தான் போட்டி. திமுகவுடன் கை கோர்த்துள்ளதாக சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இரு தரப்பினரும் தேர்தலில் ஜெயிக்கும்போது யார் உண்மையான அதிமுக என்பது தெரிய வரும் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியவர்தான் செம்மலை.  எங்களோடு 21 எம்எல்ஏக்கள் இருப்பதால் ஆட்சி விரைவில் கவிழும். ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. ஆட்சி வீட்டுக்கு சென்றதும் அங்குள்ளவர்கள் எங்களிடம் வருவார்கள் என்று கூறினார்.

மேலும், எடப்பாடி தலைமையிலான அரசு,  பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட ஆளுநர் தயங்குகிறார். ஆளுநர் பதவி மீதான மரியாதை குறைந்து வருகிறது.  ஆளுநர் முடிவுக்கு இரண்டு நாள் மட்டுமே காத்திருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.