சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம், ஜனநாயகத்திற்கு எதிரானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்தியஅரசு நடப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தேர்தல் செலவினத்தை குறைப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறி வருகிறது. மேலும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு ஆய்வு அறிக்கையும், தேர்தலை நடத்தலாம் என கூறியுள்ளது.
இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடத்து, இந்த சட்ட மசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டால் அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலோடு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், “‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும்.
இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்” என மிகவும் கோபத்துடன் பதிவிட்டு எழுக #இந்தியா! (Rise up #INDIA!) என்ற ஹேஷ்டேக்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.