விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இடையே செய்தியளார்களிடம் பேசும்போது, இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம் என உறுதி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவருகிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள குப்பம் பகுதிகளில் முதல்வர் நேரில் கள ஆய்வு செய்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.

வங்கக் கடலில் மையம் கொண்டி ருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிக ளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

புயல் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது. மேலும் மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் படுத்தப்பட்டு அம்மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இதற்கிடையில், கடந்த 30ந்தேதி இரவு முதல் தொடங்கிய மழை இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தை சூறையாடியது.  இடைவிடாமல் கொட்டிய கனமழையால் சாலை யெங்கும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விக்கிரவாண்டி அருகே மேலகொந்தை கிராமத்தில் வெள்ளம் சூழந்துள்ளதால் அக்கிராம மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

திண்டிவனம் – மரக்காணம் சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரத் தால் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணை அதன் கொள்ளளவான 32 அடியில் தற்போது 30.5 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 36,203 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதையடுத்து அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புற கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அணையில் 9 கதவுகளையும் திறந்து நீர் வரக்கூடிய 36,203 கன அடி உபரி நீரை அணையிலிருந்து வெளியே திறந்துவிட்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளி யேறியது.

இதேபோல் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை மழை அளவு: விழுப்புரம் 27.5 செ.மீ, விக்கிரவாண்டி 24.0 செ.மீ, வானூர் 24.0 செ.மீ, திண்டிவனம் 37.4 செ.மீ, மரக்காணம் 23.8 செ.மீ, செஞ்சி 25.5 செ.மீ, மேல்மலையனூர் 22.9 செ.மீ, கண்டாச்சிபுரம் 17.9 செ.மீ, திருவெண்ணெய்நல்லூர் 7.8 செ.மீ, மொத்த மழை அளவு 485.0 செ.மீ, சராசரி மழை அளவு 23.98 செ.மீ.மரக்காணம் அருகே காணிமேடு குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்தபடி வெளியில் வருகின்றனர். கீழ்பெரும்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தை தொட்டுச் செல்லும் மழைநீர்.வீடூர் அணை திறக்கப்பட்டதால் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதன் காரணமாக தென்மாவட்ட ரயில் சேவைகள் முடங்கி உள்ளன. பல ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக அவர் வெளியிட்ட பதிவில், ” ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களைத் தொடர்புகொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சு. முத்துசாமி அவர்களையும், தருமபுரி மாவட்டத்துக்கு சேலம் ராஜேந்திரன்  அவர்களையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். இம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசிக் கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்!,”

இவ்வாறு தெரிவித்தார்.