சென்னை: அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்போம், ஆனால் அது எப்போது என்று தெரியாது என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு அமமுகவினர் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில், சசிகலாவும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கூறி அதிமுகவுக்கு கிலியை ஏற்படுத்தினார். ஆனால், சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும், அரசியலில் ஈடுபடப்போவதாக குறிப்பிட்டுள்ளது அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.
இதற்கிடையில், செய்தியளார்களை சந்தித்த டிடிவி தினகரனும் அதிமுக தலைமை மீது கடுமையாக சாடியதுடன், அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் எடப்பாடியை சந்தித்து பேச சசிகலா திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் சந்திப்பு இருக்கும் என்றும் தகவல்கள் பரப்பட்டது. இதனால் கடுப்பான அதிமுக தலைவர்கள் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் பேச்சுக்கு, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க மாட்டோம், அதற்கு 100 சதவிகித வாய்ப்பு இல்லை என்றும் , அமமுகவும், அதிமுகவும் ஒருபோதுரும் இணையாது என உறுதியாக கூறியுள்ளார்.
இது அமமுக மற்றும் சசிகலா தரப்புக்கு மேலும் கோபத்தை கிளறி உள்ளது. இதையடுத்து, சென்னை திநகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுகவை ஆரம்பித்தோம். ஆனால், அது என்றைக்கு நடக்கும் என்று தெரியாது. ஆனால் மீட்டெடுப்போம். முதலமைச்சர் பதவியிலும், அமைச்சர் பதவியிலும் இருந்துகொண்டு எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் தரமற்ற முறையில் பேசி வருகின்றனர். பேசுபவர்கள் பேசட்டும். காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.
சசிகலா வருகையால், அவர்கள் ஒருவாரமாக ஏன் பதற்றத்தில் இருக்கிறார்கள். அமைச்சர்கள் ஒரு வாரமாக ஏன் பதறுகிறார்கள்? என்ன காரணம்? தேர்தலில் நிற்க முடியாதே தவிர தீவிர அரசியலில் ஈடுபட சசிகலாவுக்கு தார்மீக உரிமை உண்டு. நாங்கள் பேசாமல் வந்தோம். நாங்கள் பேசாமல் இருக்கிறோம். நாங்கள் கட்சி ஆரம்பித்தததே அதிமுக மீட்டெடுக்க என்று சொல்கிறேன். அது தப்பா? அவர்களுக்கு காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என்றார்.
மேலும், “பொதுச்செயலாளரை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றவர், ஒரு வார காலமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம் ஏன் இவர்கள் பதறுகிறார்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சசிகலா ஒருவார காலம் ஓய்வில் இருப்பார்” என்றார்.