சென்னை: ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே 2026 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தின் முதல்வராக, மு.க.ஸ்டாலின் 2021 முதல் ஆட்சியில் உள்ளார்.  அவர் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்தொடர்ச்சியாக தற்போது ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரத்துடன், திமுக உறுப்பினர்கள் சேர்க்கையையும் தீவிரப்படுத்தி உள்ளார்.

அதே வேளையில், தமிழ்நாட்டில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அதிமுக தலைமை செயலாற்றி வருகிறது. இதற்காக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதுடன் தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக,  ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’  என கோஷத்துடன்  அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரசாரங்களை தொகுதிவாரியாக மேற்கொள்கிறார்.  தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரது  முதற்கட்ட மக்கள் சந்திப்பு பயணம் வரும் 7ந்தேதி தொடங்குகிறது. ஜூலை  7-ந்தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

இந்த  சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க  கூட்டணி கட்சியான பா.ஜ.க.வினருக்கு அதிமுக சார்பில்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதற்கான பணிகளை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமியின், முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் நிறைவுபெற உள்ளது.

ஜூலை 7-ந்தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில்  இருந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கி, அன்றைய தினம்,   மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிகளிலும், மறுநாள் 8-ந் தேதி கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் ஒரே நாளில் 3 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அ முதற்கட்ட சுற்றுப்பயணத்தை வருகிற 23-ந்தேதி ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிகளில் நிறைவு செய்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ரோடு ஷோ மேற்கொள்வதுடன், அதன் நிறைவில் மக்கள் மத்தியில் பேசி அ.தி.மு.க.வுக்கு ஆதரவும் திரட்டுகிறார்.  இந்த ரோடு ஷோவின் போது அவர் வாகனத்தில் செல்லாமல் நடந்தே சென்று மக்களை சந்திக்க உள்ளார்.

இதுதவிர அந்தந்த தொகுதிகளில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுகிறார்.

மேலும் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக கோவைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அவரை மேள, தாளங்கள் முழங்க வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோன்று எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க கூடிய இடங்களிலும் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோரை திரட்டி தங்கள் பலத்தை காட்டுவதற்கும் அ.தி.மு.கவினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று வருகிற 7-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பா.ஜ.க.வினர் பங்கேற்க உள்ளனர். இதுதவிர எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி, அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதை முன்னிட்டு மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு சட்டசபை தொகுதிகளில் அவர் ரோடு ஷோ நடத்தக்கூடிய இடம், மக்களை சந்தித்து பேசும் இடங்களை கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். அங்கு பல்வேறு முன்னேற்பாடு பணிகளையும் அ.தி.மு.க.வினர் வேகமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’: ஜூலை 7 முதல்  சட்டமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணம்!