சென்னை:
காவிரி மேலாண்மை வாரியும் அமையும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று அதிமுக எம்.பி.யும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை ஆவேசமாக கூறினார்.
காவிரி பிரச்சினையில் தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், கர்நாடக தேர்தலை கருத்தில்கொண்டு பாரதியஜனதா அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், தமிழக எம்.பி.க்களையோ, அனைத்துக்கட்சி தலை வர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்து வருகிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முதன் நடைபெற்று வருகிறது. நேற்றைய மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அ.தி.மு.க- திமு.க உள்ளிட்ட எம்பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மக்களவையில் அதிமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிமுக எம்.பி-க்கள் வேணுகோபால், குமார், அரி, அருண்மொழிதேவன், சத்தியபாமா உள்ளிட்டோர் நோட்டீசை அளித்துள்ளனர். இதற்கு சபாநாயகர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில், இன்று காலை அதிமுக எம்.பி.க்கள், துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூ. எம்.பி-க்கள் இணைந்து கொண்டனர். இதன் காரணமாக போராட்டம் வலுப்பெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, உணர்வின் அடிப்படையில் அதிமுக, திமுக எம்பிக்கள் இணைந்து காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்தி னோம் என்று கூறினார். இந்த போராட்டத்தில் தி .மு.க எங்களுடன் இணைந்து போராடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமுயும் இல்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை பாராளுமன்ற அவைகளை நடத்த விட மாட்டோம் என்று ஆவேசமாக கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் காரணங்க ளுக்காக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அவர், காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை, அதிகாரிகள் மட்டத்தில்தான் தற்போது பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், அமைச்சர்கள் மட்டத்தில் அழைப்பு இல்லை என்றும் மத்திய அரசை தம்பித்துரை கடுமையாக குற்றம் சாட்டினார்.