சென்னை: கருணாநிதி நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார். அதுபோல வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய பாஜக அரசு, கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 காயனை வெளியிட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா ஆகஸ்டு 18ந்தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மத்திய பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நாணயத்தை வெளியிட்டார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்படுவதற்கு காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிருந்தார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், “கலைஞரின் தொலைநோக்குப் பார்வை கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமாக வாழ வழி வகுத்தது. அவரது ஆட்சியின் கீழ் தமிழ்நாடு ஒரு தைரியமான பாதையில் பயணித்தது. அவரது கொள்கையில் இருந்த தெளிவு தமிழ்நாடு, முன்னோடியாக திகழ உதவியது. அவருக்கு நினைவு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடுவதற்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “கலைஞரின் கனவை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்து பதில் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.