தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்தால். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரே கூலிப்படையை ஏவி கொலை செய்கிறார்கள். சமீபத்தில் உடுமலையில் நடந்த ஆணவக்கொலையிலும் இதுதான் நடந்தது.
இந்த நிலையில், “தலித் இளைஞரைத்தான் எங்கள் மகளை திருமணம் செய்துதருவோம்” என்று பெற்றோரே திருமணம் செய்துவைத்தால்?
கேட்கவே இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?
அப்படித்தான் நடந்திருக்கிறது… அதுவும் 26 வருடங்களுக்கு முன்பே!
அப்படி திருமணம் செய்துகொண்டு, திருமண வாழ்வில் வெள்ளிவிழாவைக் கடந்த இறைவி பேசுகிறார்:
“என்னுடைய அப்பா இறையன், கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றினார். அம்மா, திருமகள் ஆசிரியை.
அப்பா இறையன், பெரியார் பற்றாளர். பெரியார் பேருரையாளர் என்று போற்றப்பட்டவர். சாதி ஒழிப்பை வலியுறுத்தும்படியாக, கலப்புத்திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தே, என் அம்மாவை திருமணம் செய்துகொண்டார் அப்பா. அம்மா திருமகளும் பகுத்தறிவாளர்.
என் பெற்றோர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கலப்புத்திருமணம் செய்துகொண்டார்கள். அப்போது கடும் எதிர்ப்பு சிலகாலம் தலைமறைவாக இருக்கவேண்டிய நிலை.
எனக்கு உடன் பிறந்தவர்கள் மூவர். அக்கா பண்பொழி, அண்ணன் இசை இன்பன், தங்கை மாட்சி.
என், அக்கா பண்பொழி திருமண வயதை அடைந்ததும், என் பெற்றோர் ஒரு விசயத்தில் தீர்மானமாக இருந்தார்கள். அக்காவுக்கான மாப்பிள்ளை, என் அப்பா சாதியாகவோ அம்மா சாதியாகவோ இருக்கக்கூடாது என்பதுதான் அந்தத் தீர்மானம். அதே போல் வேறு சாதியில் மணமகனை தேடி திருமணம் செய்தார்கள். என் தங்கை மாட்சிக்கும் அப்படித்தான்.
என்னைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் திருமணம் என்பதே சிறைதானே.. அது நமக்கு எதற்கு என்ற எண்ணம் இருந்தது. பிறகு திருமணம் செய்ய வேண்டய சூழலில் “என் தாய், தந்தை வெவ்வேறு சாதியாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆக நானும் அப்படித்தான். ஆகவே ஒரு தலித் இளைஞரைத்தான் திருமணம் செய்வது என்று தீர்மானித்தேன்.
இதை என் தோழிகளிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். என்தோழிகள் இதை என் அப்பாவிடம்சொல்ல, அவருக்கு பெரு மகிழ்ச்சி. “அட.. நானும் அந்த முடிவில்தானே இருக்கிறேன்!” என்றார். அம்மாவும் அப்படியேதான் சொன்னார்.
மணமகன் தேடும் படலம் ஆரம்பமானது. இரண்டே நிபந்தனைகள்தான் எங்கள் தரப்பில்.
மணமகன் தலித் ஆக இருக்க வேண்டும், பகுத்தறிவாளராக இருக்கவேண்டும் அவ்வளவுதான்.
நாங்கள் எல்லோருமே திராவிடர்கழகத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் கழகத்தைச் சேர்ந்த நயினார் என்ற தலித் இளைஞருக்கும் அப்படி ஓர் எண்ணம் இருந்திருக்கிறது. அதாவது அவரை சிலர், “திராவிடர் கழகம், பகுத்தறிவு, சாதி மறுப்பு என்றெல்லாம் பேசுகிறாயே..! தலித் இளைஞனான உன்னை, உன் இயக்கத்திலேயே இருக்கும் ஆதிக்க சாதியை சேர்ந்த பெண் யாராவது திருமணம் செய்துகொள்வாரா” என்று கேட்டிருக்கிறார்கள்.
“நிச்சயமாக!” என்று சொன்ன நயினார், “சாதி ஒழிப்புக்காக,நான் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணைத்தார் திருமணம் செய்துகொள்வேன்” என்று சபதமும் போட்டிருக்கிறார்.
இது குறித்து, இயக்கத் தோழர் வழக்கறிஞர் அருள்மொழியிடம் சொல்லியிருக்கிறார். அவர் எங்கள் வீட்டில் சொல்ல, எனக்கும் நயினாருக்கும் இனிதே திருமணம் முடிந்தது.
1990ம் ஆண்டு மே 25 அன்று தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நடந்த ஏழு திருமணங்களில் எங்களதும் ஒன்று. இப்போது இருபத்தைந்து வருடங்கள் முடிந்து திருமண வெள்ளிவிழாவும் கொண்டாடிவிட்டோம்!”
எங்கள் மகள் பெயர், புயல்.. சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கனடாவில் உயர்கல்வி படிக்கிறார். மகன் பெயர்,: புகழ். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார்..
எனது அக்கா, மாமா பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்களது . மூத்த மகன் வீரமணி காதல் திருமணம் செய்துகொண்டான் காதலை ஏற்று நாங்களே திருணம் செய்து வைத்தோம். .
இளையவர் வெற்றி மணி. அவருக்கு பெண் பார்க்கும்போதும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து வைப்பது என்கிற முடிவோடு, பெண்தேடி திருமணம் செய்துவைத்தோம்.
சாதி என்கிற ஒன்றே கிடையாது. அதில் உயர்வென்ன தாழ்வென்ன? எல்லோரும் மனிதர்கள்தானே! மனிதர்களில் உயர்வு தாழ்வு பார்ப்பது என்பது எத்தனை இழிவான செயல்.” என்றவர் சற்றே நிறுத்தி நிதானமாகச் சொல்கிறார்: “ உடுமலையில் நடந்த ஆணவக்கொலையை கேள்விப்பட்டவுடனே இவ்வளவு கேவலமான நாட்டிலேயா வாழறோம்னு தோணுச்சு!”
- டி.வி.எஸ். சோமு