புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டி சரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டும், அதையும் மீறி மோடி அரசு அந்த நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பான தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளதுடன், அதன்மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது, “ரிசர்வ் வங்கியின் தெளிவான விளக்கங்கள் மற்றும் எச்சரிக்கைகளை மீறியும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மக்களின் மீது மோடி அரசு திணித்தது தொடர்பான விபரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளன.
கருப்பு பணத்தின் உண்மையான நடைமுறை வடிவம் மற்றும் நேரடியான பண வடிவத்தில் புழங்கும் கருப்பு பணத்தின் அளவு மற்றும் உண்மையான பொருளாதார வளர்ச்சி அளவீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் சரியான விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால், அவற்றையும் மீறித்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு என்பது ஒரு மாபெரும் பணமோசடி நடவடிக்கை. அதன் மோசமான விளைவுகளை நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, காங்கிரஸ் அரசு மத்தியில் அமைந்ததும், இதுதொடர்பான விசாரணைக்கு உத்தவிடப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில், காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடமாக்கும் வகையில் அதன்மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்த சட்டத்தின் மூலம்தான், ரிசர்வ் வங்கியில் நடந்தது என்னவென்பதை அறிந்துகொள்ள முடிந்தது” என்றார்.
– மதுரை மாயாண்டி