கொல்கத்தா:

எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் மோடி அரசு செயல்படுவது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சியினருக்கு சாதாரணமாக நோட்டீஸ் அனுப்பி அவர்களை விசாரணைக்கு அழைக்கும் மத்திய அரசின் மிரட்டல் போக்கு கண்டனத்துக்குரியது.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுடன் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய விதம், மக்களவைத் தேர்தலை மையமாக வைத்தே செய்யப்பட்டது.

பிரியங்கா அரசியலுக்கு வர முடிவான பிறகுதான், இதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இப்படி நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்து எதிர்கட்சிகளை மோடி அரசு மிரட்ட முடியாது. தேர்தலை மனதில் வைத்து இது போன்ற செயல்களில் மத்திய பாஜக கூட்டணி அரசு ஈடுபடுவதால், தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுப்போம் என்றார்.