சென்னை: முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் என கூறிய அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு,. போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான் என கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்திய சோதனைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நேற்று காலை நடைபெற இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நீலாங்கரை போலீசார் அக்கரை பகுதியில் சோதனை சாவடியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், சென்னை அக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். 6மணியை தாண்டியும் பெண்கள் உள்பட கைது செய்யப்பட்டவரை விடுவிக்காத நிலையில், அண்ணாமலைக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சுமார் 9 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சுமார் 110 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலின் முதல் குற்றவாளி. செந்தில் பாலாஜி 2வது குற்றவாளி தான். ஒரு அமைச்சருக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார். டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. போலீசாரின் மீது நம்பிக்கை இருந்ததால் தேதி அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தோம். இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். அப்போது என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்.
பா.ஜ., மீதான பயத்தின் காரணமாக போராட்டம் தடுக்கப்படுகிறது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். ஊழல் செய்யவில்லை என்றால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். பயம் இருந்ததால் கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் நல்ல அரசியலை கொண்டு வர பா.ஜ., போராடுகிறது.
முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க., தேர்தலை சந்தித்தது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க., சந்திக்க உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு , பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தார். அண்ணாமலை போன்ற மாநில தலைவர் தமிழ்நாட்டிற்கான மாபெரும் சாபக்கேடு என்று கூறியதுடன், நாட்டை காப்பாற்றுவதற்காக தூக்கமில்லாமல்தான் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர் என்றவர், எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை.
“நாட்டுக்காகப் போராடுவதாகக் கூறும் அண்ணாமலையால் 5 மணி நேரம் காவலில் இருக்க முடியவில்லை. எங்கள் முதல்வர் திருமணமான ஓராண்டு காலத்தில் மிசாவில் கைதாகி சிறைச்சாலையில் கழித்தவர். முதல்வருக்கு எதிரான போராட்டம் இந்த மண்ணிலேயே எடுபடாது. 5 மணி நேரம் கூட போலீஸ் காவலில் இருக்க முடியாத அண்ணாமலை, நாட்டிற்காக எப்படி உழைப்பாய்? ஒரு அண்ணாமலை அல்ல 100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்போம் என்றார்.
2 மொழிப்போராட்டங்கள், எமெர்ஜென்சியை கண்ட இயக்கம்தான் தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோதும் கொள்கைக்காக சமரசம் செய்யாத இயக்கம். தி.மு.க என்ற வாள்.. போர் வரும்போது அதன் உறையில் இருந்து வெளியே வரும்.
தமிழக மண்ணிலேயே அனைத்து போராட்டங்களிலும் களத்திலேயே நின்று இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின் என்றார் சேகர்பாபு.
தொடர்ந்து அவரிடம் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படம் அடித்து மாட்டப்படும் என அண்ணாமலை கூறியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், மானங்கெட்ட அண்ணாமலை உத்தரப் பிரதேசத்துக்கு சென்று பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அங்குள்ள முதல்வர் படத்தை அடித்து மாட்டட்டும். நாங்கள் வேண்டுமானால் கூட ஆணியை சப்ளை செய்கிறோம். அதற்கு பிறகு இங்கே வரட்டும் என்றார்.
இதுபோன்ற மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் அஞ்சி யாரும் பதுங்கி வீட்டிலே அமர்ந்துவிட மாட்டார்கள். முன்பைவிட வேகமாக முன்னோக்கி எட்டுகால் பாய்ச்சலில் தி.மு.க. பயணிக்கும். முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோ என அண்ணாமலை கூறுகிறார், அவர் போராட்டத்திற்கான நாளை குறிக்கட்டும், அவரது போராட்டத்தை போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் தடுப்பான் என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை, திருச்செந்தூர் கோவிலில் வரிசையில் நின்ற 50வயதான முருக பக்தர், பல மணி நேரம் வரையில் போதுமான காற்று வசதி இன்றி மூச்சுத்திணறி இறந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முருக பக்தர் இறந்தது இயற்கையானதுதான்.
முன்னதாக, திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம் குமார் என்ற முருக பக்தர் தனது குடும்பத்துடன் வந்திருந்தனர். இவர்கள் தரிசனத்துக்காக ரூ.100 கட்டண டிக்கெட் வாங்கிக்கொண்டு சில மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அங்கு போதிய காற்றுவசதி இல்லாததால், ஓம் குமார் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவர் வரிசையில் இடையில் இருந்ததால், அவரை உடனே வெளியே கொண்டுவர முடியாமல் அவரது குடும்பத்தினரும் சக பக்தர்களும் அவதியடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பணம் வசூலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன.
முருக பக்தர் ஸ்ரீகுமார், மரணத்துக்கு கூட்ட நெரிசல் மற்றும் போதைய வசதியின்மை காரணம் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. ஆனால், அதனை ஏற்க மறுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஏற்கனவே உடல்நல பாதிப்பு கொண்டிருந்த ஓம் குமார் இயற்கை மரணம் அடைந்தார் என விளக்கம் கூறி வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பக்தர்கள், “திருச்செந்தூர் கோவிலில் ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது. அங்குள்ள அர்ச்சகர்கள், சாமி முன்பு சென்று தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கில் பணம் கேட்கின்றனர். இலவசம் மற்றும் ரூ.100 தரிசனத்தில் செல்வோர் குடிக்க தண்ணீர் கூட இல்லை. போதுமான காற்று வசதி இல்லை. முதியோர்கள், நோயாளிகள் கூட பல மணி நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வைக்கப்படுவதால், அவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகின்றனர். அவர்கள் அமர்வதற்கு கூட எந்தவொரு வசதியும் செய்து தரப்படவில்லை. அதுபோல பல மணி நேரம் காத்திருந்தும், தரிசனம் கிடைக்க தாமதமானால், தாங்கள் வெளியேறலாம் என நினைத்தாலும், அவர்கள் வெளியேற எந்தவொரு அவசர வசதியும் செய்யப்படவில்லை, பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர், காற்றோட்டம், மருத்துவ வசதி என அடிப்படை வசதிகள் எதுவுமே இல்ல என தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் கூறும்போது, திருச்செந்தூர் போல மோசம் வேறெங்கும் நடக்கவில்லை. பிற கோவிகளில் கூட்டம் அதிகமாக இருந்தால், விஐபி தரிசனம் வழியேவும் அனுப்பி பக்தர்களின் நலனை பாதுகாக்கின்றனர். ஆனால், திருச்செந்தூரில் பணம் பணம் என அலைகின்றனர்.
அதுபோல உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தினர் கூறும்போது, மோசமான நடத்தைகள், பாதுகாப்பற்ற சூழல், மருத்துவ வசதி இல்லாத காரணமாக ஓம்குமார் உயிரிழக்க ஏற்பட்டது. எங்களுக்கு ஏற்பட்ட நிலை, வேறு யாருக்கும் ஏற்பட கூடாது என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஓம் குமாரின் மரணத்துக்கு, அவரின் மோசமான உடல்நிலை காரணம் என அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.