ஈரோடு: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல் செய்வதில் 75% வெற்றி கிடைத்துள்ளதாகவும், அந்த விஷயத்தில் விரைவில் 100% என்ற இலக்கு அடையப்படும் என்றும் பேசியுள்ளார் தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன்.

கவுந்தம்பாடியில் ரூ.4.2 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜையில் அவர் பங்கேற்றபோது கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான தடை அமல்செய்யப்பட்ட பின்னர், இதுவரை 170 பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தேர்தல் காலமாக இருந்ததால், பிளாஸ்டிக் தடையை அமல்செய்யும் விஷயத்தில் அதிகாரிகளால் முழுவீச்சில் ஈடுபட முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது தேர்தல்கள் முடிந்துவிட்டதால், சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, தடையை மீறுவோருக்கான தண்டனைகள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசின் நடவடிக்கைகள் சிறிதுசிறிதாக விரிவுபடுத்தப்பட்டு, முற்றிலும் பிளாஸ்டிக் ஒழிந்த மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும். அரசின் நிகழ்ச்சிகள் எதிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை. மக்களும் தங்கள் வீட்டு விசேட நிகழ்வுகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்றுள்ளார் அமைச்சர்.

[youtube-feed feed=1]