மாஸ்கோ: அமெரிக்கா தரப்பில் குறுகிய மற்றும் நடுத்தர தொலைவிலான இலக்குகளை தாக்கும் தரையிலிருந்து இயங்கும் அணு ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அதே பாணியில் ரஷ்யாவும் களமிறங்கும் என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின்.

கடந்த 1987ம் ஆண்டு ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஐஎன்எஃப் ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவதாக குற்றம்சாட்டி, அதிலிருந்து விலகிக்கொண்டது அமெரிக்கா.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, இரு நாடுகளும் 500 கி.மீ. முதல் 5500 கி.மீ. தூரம் பாயும் தரையிலிருந்து இயங்கும் அணு ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம், அந்த நாடுகளுக்கு இடையிலான திடீர் அணு ஆயுத தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருந்தன.

ஆனால், அமெரிக்கா தற்போது அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் அந்நாட்டு அதிபர் புதின் கலந்துரையாடினார்.
இதனையடுத்து, முடிவுக்கு வந்த ஒப்பந்தத்தில் தடைசெய்யப்பட்டிருந்த ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபடுகிறதா? என்று கண்காணிக்குமாறு புதின் தனது நாட்டின் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

“அமெரிக்க அவ்வாறு ஈடுபடுவதாக உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், ரஷ்யாவும் அதே நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.