நியூயார்க்:

ல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்து உள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இருந்து தற்காத்து கொள்வது இந்தியாவின் உரிமை என்றும் அவர் கூறி உள்ளார்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பின் தற்கொலை படை தாக்குதலில்,  44 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது நாங்கள்தான் என்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு கொக்கரித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு  அமெரிக்கா, ரஷ்யா உள்பட  உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில்,  அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்த தாக்குதல் குறித்து  இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கை களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஜான் போல்டன் உறுதியத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவுடன் நடத்திய உரையால் குறித்து கூறிய ஜான் போல்டன்  ‘தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அஜித் தோவலிடம் நான் கூறினேன்.  ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக அவரிடம் 2 முறை பேசினேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.