அகமதாபாத்: அனுமதியளிக்கப்படாத நீண்ட விடுமுறை எடுத்த காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த லாக்-அப் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அவரின் மனைவி ஸ்வேதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சஞ்சீவ் பட், குஜராத் கலவரத்தில் இந்துத்துவ வன்முறை கும்பல்களுக்கு அதிக சுதந்திரம் அளித்தார் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இவரின் பணி நீக்கம் மற்றும் இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ஆகியவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா கூறியுள்ளதாவது, “இந்த நாடு ஒரு நேர்மையான அதிகாரியின் பின்னால் நின்று ஆதரவு அளித்தால், நீதிக்கான போராட்டத்தை தொடர முடியும். இந்த விஷயத்தில் வெறும் வார்த்தைகள் மட்டும் உதவாது. ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் ஆதரவாளர்கள் வழங்கினால்தான் உபயோகமாக இருக்கும்.

மக்களுக்காக நேர்மையான முறையில் உழைத்த அதிகாரி ஒருவர், தான் செய்யாத குற்றத்திற்காக தற்போது தண்டிக்கப்பட்டுள்ளார். இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளின் சங்கம் சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

இந்தப் பழிவாங்கும் அரசுக்கு எதிராக எனது கணவர் தனது நீதிக்கானப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார். ஆனால், நீங்களோ அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இறுதி மூச்சு உள்ளவரை எங்களின் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்.

ஆனால், எங்களின் பேராட்டத்தை நாங்கள் தனியாக நடத்த வேண்டுமா? அல்லது உங்களுக்காக பாடுபட்ட அதிகாரிக்காக உங்களின் ஆதரவு கரம் நீளுமா? என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்றுள்ளார்.