பம்பை:

காவல்துறையினரின்  பாதுகாப்புடன் அய்யப்பனை தரிசித்தோம் என்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்  முதன்முதலாக சென்ற கனக துர்கா தெரிவித்து உள்ளார்.

இன்று அதிகாலை துர்கா, பிந்து என்ற இரு பெண்கள் மப்டி உடை அணிந்த காவல்துறையினர் பாதுககாப்புடன் சபரிமலை சன்னிதானத்திற்குள் பக்தர்கள் எதிர்ப்பை மீறி நுழைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்திற்குள் இன்று அதிகாலை 2 பெண்கள் நுழைந்த வீடியோ சமுக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, கோவில் நடை மூடப்பட்டது. பெண்கள் கோவிலுக்குள் நுழைந்ததை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பெருமையாக தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் கோவிலுக்குள் நுழைந்த துர்கா ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்தார். அப்போது,  தாங்கள் ஏற்கனவே கடந்த  ஆண்டு (2018) டிசம்பர் 24 அன்று ஆலயத்திற்குள் நுழைய முயன்றோம். அப்போது கடுமையான எதிர்ப்பு எழுந்தால், எங்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் காவல்துறையினர் கீழே அனுப்பி விட்டனர்.

தற்போது மீண்டும் கோவிலுக்குள் செல்ல விரும்பினோம்.எங்களுக்கு காவல்துறையினர் உதவி செய்தனர். அதைத்தொடர்ந்து பம்பாவை அடைந்தவுடன் எங்கள் வருகையைப் பற்றி நாங்கள் பொலிஸுக்குத் தெரிவித்தோம் . பின்னர் அவர்கள் பாதுகாப்புடன்  கோவிலினுள் ஊழியர்கள் செல்லும்  வடக்கு நுழைவாயிலின் வழியாக சன்னதிக்குள்  அழைத்துச் சென்றனர்.

அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் நாங்கள் காவல்துறையினர் உதவியுடன் அய்யப்பனை தரிசித்தோம் என்று தெரிவித்து உள்ளார். இந்த தரிசனத்தின்போது பக்தர்களின் எதிர்பபையும் சந்தித்தோம் என்றும் கூறினார்.

அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து வெளியேறும் நிகழ்ச்சி 2 நிமிடங்களில் நடைபெற்று முடிந்துள்ளதாக தெரிகிறது. இது  அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கோலியான்டி பகுதியை சேர்ந்த பிந்து (வயது 42) மற்றும் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தை சேர்ந்த  கனகதுர்கா (வயது 44) ஆகிய இரு  பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.