உறையூர்: எமர்ஜென்சியையே கண்ட இயக்கம் திமுக. அண்ணாமலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்க விழா உறையூரில் நடைபெற்றது. இதில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். ஸ்மார்ட்டி சிட்டி திட்டம் மூலம், 17 வார்டுகளில் 24மணி நேரதுரும் குடிநீர் வழங்கும் வகையில் 28.5 கோடி ரூபாய் செலவில் திடடம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், திருச்சி மாநகராட்சிக்கு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்க தேவையான திட்டம்தான் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வருடத்தில் திருச்சி மாநகராட்சி மக்களுக்கு 24மிணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கும் என்றார். மேலும், கழிவு நீரை ஆறுகளில் கலப்பதைத் தடுக்கும் வகையில் திட்டம் உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், அவரது அடாவடி பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர், திமுகவினர் எந்வொரு எதிர்ப்பையும் சந்திக்கும் வலுவோடுதான் உள்ளனர். திமுக சந்திக்காத எதிர்ப்பா? எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் திமுக. அண்ணாமலை புதிதாக பாஜகவின் தலைவராகியிருக்கிறார், அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இதுபோன்று ஏதாவது பேசி வருகிறார். அண்ணாமலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது. நாங்கள் தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.