திருப்பதி: மொழிக்கான உரிமைகளை பெறுவதில் தமிழர்களை போல் போராட வேண்டும் என திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.

மாநில மொழிகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரமணா, ஒவ்வொருவரும் தாய்மொழியை கற்க வேண்டும், அதுபோல மற்ற மாநில மொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டும். “நீங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது வேறு எந்த மொழியை யும் கற்கலாம். ஆனால் தாய்மொழியில் உறுதியாக இருப்பது பிற மொழிகளை எளிதாகக் கற்க உதவும்” அவர் ஒருவருடைய வளர்ச்சிக்கு உதவும் என்றும், மாநிலங்களில் வழக்காடு மொழியாக, அந்தந்த மாநில மொழிகளை கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம்,  திருப்பதி எஸ்.வி.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுக்கான கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு  பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  என்.வி.ரமணா, தமிழர்களைப் போல   மொழிக்கான உரிமைகளை பெறுவதற்கு ஆந்திர மாநிலத்தவர்களும்   போராட வேண்டும்  என்று கூறியிருக்கிறார்.

ஒவ்வொருவரும் தாய்மொழியை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மொழிக்காக தெலுங்கர்கள் அனைவரும்  ஒன்றினைய  வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன்,  இதற்கு உதாரணமாக தமிழர்களை  எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி னார்.

தொடர்ந்து பேசியவர்,  செம்மரம் கடத்தலில் ஈடுபடுவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை போதாது என்று கூறியதுடன், அவர்கள் மீதான தண்டனை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அரிய வகையிலான மரங்களை வெட்டுவது கொலை குற்றத்திற்கு சமம் என்று கூறியதுடன்,  செம்மரங்கள் அழிந்து வரும் தாவரங்கள் பட்டியலில் இருப்பதால் அவற்றை காக்க வேண்டியது நமது கடமை என்றும் கூறினார்.