தே.மு.தி.க. என்ற கட்சியை இந்த தேர்தலுடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ‘பார்சல்’ செய்து விடுவார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். விஜய காந்த் ‘ஆக்டிவ்’ ஆக இருந்தபோதே – கட்சி பிரேமலதா கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
உடல் நலக்குறைவால் ,அமெரிக்காவில் சிகிச்சை பெற்று .சாலிகிராமம் வீட்டில் விஜயகாந்த் ஓய்வு எடுத்து வரும் நிலையில்- தே.மு.தி.க.-பிரேமலதா கண் அசைவிலேயே செயல்படுகிறது.
பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் ,அ.தி.மு.க.வுடன் உடன்பாட்டை முடித்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டுக்கு விரைந்தார்.
அ.தி.மு.க.,பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் உடன்பாட்டை முடித்து கொண்டு டெல்லி திரும்ப வேண்டும் என்று அவருக்கு ‘அசைன்மெண்ட்’ கொடுக்கப்பட்டி ருந்தது.
பாதி கிணறு தாண்டிய – கோயலுக்கு தே.மு.தி.க.வை ‘டீல்’ செய்வது சிரமமாகவே இருந்தது.
விஜயகாந்த் –பேச்சு வார்த்தையில் ஈடுபடும் நிலையில் –இல்லை என்பதால் அவரது மச்சான் எல்.கே.சுதீசுடன் நீண்ட நேரம் விவாதித்துள்ளார். பின்னர் பிரேமலதாவுடன் பேசினார்.
‘’10 தொகுதிகள் எங்களுக்கு வேண்டும்’’ என்று ஆரம்பத்தில் பிடிவாதம் காட்டிய இருவரும் –பின்னர் ‘’ பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் 7 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா’’ கண்டிப்பாக வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆனால் கோயல்’’ தே.மு.தி.க.வுக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும்’’ என்று திட்டவட்டமாக கூற –பிரேமலதா ஏற்க மறுக்க -பேச்சுவார்த்தை முறிந்து போனது.
எரிச்சல் அடைந்த பியூஷ்கோயல், வீட்டுக்கு வெளியே வந்து ‘’விஜயகாந்தின் உடல் நலம் விசாரிக்க வந்தேன்’’ என்று ஊடகங்களிடம் கூறி விட்டு சென்றார்.
இப்படி நடக்கும் என்று அமீத்ஷா எதிர்பார்த்தே- தனது சென்னை விஜயத்தை ரத்து செய்து விட்டார் என்கிறார்கள் –பா.ஜ.க வட்டாரத்தில்.
—பாப்பாங்குளம் பாரதி