சென்னை: G Square நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அமைச்சர் முத்துசாமி வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையின் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளை ஆக்கிரமித்துள்ள G Square கட்டுமான நிறுவனத்தின் விளம்பரங்கள் பொதுமக்களிடையே வியப்பையும், ஏராளமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் பங்கு தாரராக உள்ள நிறுவனம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பான செய்திகளை வெளியிட்ட ஜூனியர் விகடன் பத்திரிகை உள்பட சமூக ஊடகங்கள் மீதும், ஜி ஸ்கொயரைச் சேர்ந்த புருஷோத்தம் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் இ – 1 காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தங்களுடைய நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஜூனியர் விகடன் இதழும் அதன் இணையப் பதிப்பும் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிப்பித்து வருவதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், கெவின் என்பவர் மூலம் தங்களிடம் 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்தப் புகாரை அடுத்து, மயிலாப்பூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த காவல்துறை, கெவின், அடையாளம் தெரியாத ஒரு நபர், ஜூனியர் விகடனோடு தொடர்புடையவர்கள், ஜூனியர் விகடனின் செய்தியாளர், அதன் ஆசிரியர், மாரிதாஸ், ‘சவுக்கு’ சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்தது. கெவின் என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, புகாரை பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர்க இடமாற்றம் செய்யப்பட்டதுடன், ஜூவி உள்பட பலர்மீது பதியப்பட்ட புகார்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி G Square நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை பதில் அளித்துள்ளார். மேலும், அனைத்து நிறுவனங்களுக்கும் விதிகளின் படி அனுமதி வழங்கப்படுகிறது. வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை என்றவர், 10ம் தேதி முதல் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.