டெல்லி: எங்களை குடிமகன்களாக மதிக்கவில்லை என்றால், நாங்கள் உங்களை ஒரு அரசாக கருதமாட்டோம் என்று ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா கூறியிருக்கிறார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந் நிலையில் பூர்னியா பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா சந்தித்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
அமைதியாக போராடி உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். எங்களை மதிக்காத இந்த அரசை நாங்கள் மதிக்க மாட்டோம். நாடாளுமன்றத்தில் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கலாம்.
ஆனால் எங்களுக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவு இருக்கிறது. இந்து, முஸ்லீம்களுக்கான போராட்டம் அல்ல. இந்த நாடு சாவர்க்கர் நாடாக மாறிவிட கூடாது என்பதற்கான போராட்டம்.
அரசியலமைப்பை காப்பாற்ற மேற்கொண்டிருக்கும் சண்டை இது. பிரக்யா தாகூர் இருப்பதை போன்ற ஒரு நாடு எங்களுக்கு வேண்டாம். போராட்டக்காரர்களின் உடல் மொழியை பிரதமர் மோடி அறிந்திருக்கலாம்.
ஆனால் அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை நன்றாக அறிந்தவர்கள் நாங்கள். உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களிடம் கொண்டு செல்வோம் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் பெகுசாராய் தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங்கிடம் தோல்வியை தழுவிய பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் பிரமாண்ட பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.