டில்லி:
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை வரவேற்றேனே தவிர, பா.ஜ.க.வில் அவர் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கவில்லை” என்று அக் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சமீத்தில் அரசியல் குறித்து ரஜினி பேசியதை அடுத்து, அவர் கட்சி துவங்கப்போகிறார் என்றும், பாஜகவில் இணையப்போகிறார் என்றும் யூகங்கள் கிளம்பின.
பா.ஜ.க. பிரமுகர்கள் பலர் தங்கள் கட்சியில் சேரும்படி ரஜினிக்கு ஏற்கெனவே வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளனர். ரஜினியின் பேச்சுக்குப் பிறகும் சிலர் அப்படி அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, தங்களது கட்சியில் சேரும்படி ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பாஜகவின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிம் பேசிய அமித்ஷா, “ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் செய்ய இயலாத பல சாதனைகளை, மூன்றே ஆண்டுகளில் மோடி நிகழ்த்திவிட்டார். முந்தைய ஆட்சிகளில் இல்லாத அளவிற்கு ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
ரஜினிக்கு அழைப்பு விடுத்தது பற்றிய கேள்விக்கு, பதில் அளித்த அமித்ஷா, “ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்றே கூறினேன். மற்றபடி அவரை பாஜகவில் இணைய வேண்டும் என்று அழைக்கவில்லை” என்று தெரிவித்தார்.