சென்னை:
நாளை ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் மெர்சல் திரைப்படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல்தான். படத்தின் பெயரை தாங்கள் பதிவு செய்திருப்பதாக வேறொரு தயாரிப்பாளர் சொல்ல.. பெரும் பஞ்சாயத்து நடந்தது. அதில் தீர்வு காண முடியாமல், கோர்ட்டுக்குச் சென்றது விவகாரம். பிறகு ஒரு வழியாக மெர்சல் தலைப்புக்கு அனுமதி கிடைத்தது.
அடுத்ததாக, படத்தில் புறா, பாம்பு ஆகியவற்றை பயன்படுத்தியிருப்பதாகவும் அதற்கு அனுமதி பெறவில்லை என்றம் விலங்கு நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்ற சந்தேகமே எழுந்துவிட்டது.
பதறிப்போன விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசும் அளவுக்கு விவகாரம் வெடித்தது. பிறகு வனவிலங்கு நல வாரிய அனுமதி கிடைத்தது.
இதற்கிடையில் இப்படத்தின் ரசிகர் மன்ற டிக்கெட், 1200ரூபாய்க்கு விற்கப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவ.. பலரும் கண்டித்தனர். பிறகு அது, இலங்கையில் என்பது தெரியவந்தது. நடுவே, மெர்சல் படத்தை ரிலீஸ் ஆகும் அன்றே தங்களது இணையதளத்தில் வெளியிடப்போவதாக, தமிழ் ராக்கர்ஸ் அறிவித்தது. இதைத் தடுக்க விஜய் தரப்பு பலவித முயற்சிகள் செய்து வருகிறது.
ஆனால், அந்த இணையதளம், “மெர்சல் ரிலீஸ் ஆகும் அன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம்.. அதுவும் ஹெச்.டி. பிரின்ட். சொன்னா செய்வோம்.. சொன்னதை செய்வோம்” என்று பதிவிட்டு, விஜய் தரப்பினரை மிரட்டியிருக்கிறது. அந்த இணையதளத்தில் மெர்சல் வெளியாகிவிடுமோ என்ற அச்சத்தில் விஜய் தரப்பினர் இருக்க.. படம் அந்த இணையத்தில் வெளியிடப்படுமா என்ற ஆர்வத்தில் இதர ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.