தேனி:
தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கிருஷ்ண கிரி, சேலத்தை தொடர்ந்து தேனி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, பிரதமர் மோடி போல ரூ.15 லட்சம் கொடுப்போம் என்று பொய் கூற முடியாது என்று பேசினார்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பேசினார். அப்போது, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றவர், மோடி மக்களுக்கு தலா ரூ. 15 லட்சம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினார். ஆனால், எங்களால் 15 லட்சம் கொடுக்க முடியாது என்றவர், அப்படி கொடுத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர் கெட்டுப் போய்விடும் என்று கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் கெட்டுவிடாமல் நாட்டில் உள்ள 20 சதவிகிதம் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் கொடுக்க முடியும். ஏழைகளுக்கு உதவி செய்தால் நாட்டின் பொருளா தாரமும் உயரும் என்று கூறியவர், 15 லட்சம் தருவேன் என நான் பொய் கூறினால் நாட்டை சீரழித்து விடுவேன் என்று கூறினார்.
மோடி அரசு, உலகத்தில் எங்கும் இல்லாத வரியை மக்கள் மீது விதித்து அவர்களை துயரத்தில் ஆழ்ததியது என்று கூறியவர், தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை தமிழக மக்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றவர், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் மாணவி அனிதா பற்றி குறிப்பிட்டு எழுதியிருப்பதாக தெரிவித்தவர், எங்களுக்கு எப்படி தேர்வு வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம் என தமிழர்கள் கூறினர். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூறினார்.
தமிழகத்தின் மீது எதையும் திணிக்க முடியாது என்று கூறிய ராகுல், தேர்தல் அறிக்கையில் இருக்கும் புரட்சிகரமான அம்சம் நியாய் என்ற திட்டம்தான். உலகில் உள்ள எந்த நாட்டிலும் நியாய் போன்ற திட்டம் பற்றி சிந்திக்கவில்லை. கோடீஸ்வரர்களுக்கு பணம் தர மாட்டோம். மாறாக நாட்டில் உள்ள ஏழைகளுக்குதான் வழங்குவோம் என்றும், தேர்தல் அறிக்கையில் தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரல் ஒலிக்கச் செய்துள்ளதாகவும் கூறினார்.