கோயம்புத்தூர்
தாக்குதல் நடக்கும் போது மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையை எண்ணி சொல்ல முடியாது என விமானப்படை தளபதி பி எஸ் தனோவா தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டு சுமார் 300 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என கூறி வருகின்றன.
அரசு சார்பில் பாலகோட் தாக்குதலில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை குறித்து தகவல் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கோயம்புத்தூரில் ஒரு நிகழ்வில் இந்திய விமானப்படை தளபதி பி எஸ் தனோவா கலந்துக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் தனோவா, “மிக் 21 ரக போர் விமானங்கள் மேம்படுத்தப்பட்ட விமானம் ஆகும். அந்த விமானங்களில் சக்தி வாய்ந்த ராடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் வானில் சென்று தாக்கும் ஏவுகணைகளும் மிக சிறந்த தளவாடங்களும் இந்த விமானத்தில் உள்ளன.
இந்த விமானப்படை தாக்குதலில் நாம் குறி வைத்த இடங்களை தெளிவாக அடையாளம் கண்டு ஏவுகணைகளை செலுத்தி உள்ளோம். நாம் எதிர்பார்த்த அதாவது குறி வைத்த இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாம் திட்டமிட்டதை நிறைவேற்றினோம். இல்லையென்றால் பாகிஸ்தான்பிரதமர் ஏன் நம்மை தாக்க உத்தரவிட்டிருப்பார் என்பதை சிந்திக்க வேண்டும்.
நாம் வனப் பகுதிகளில் குண்டு வீசி இருந்தால் அவர் நமமை திருப்பி தாக்கி இருக்க மாட்டார். ஆகவே இந்த தாக்குதல் எதிர்பார்த்த இடங்களில் நடந்துள்ளது. அது மட்டுமின்றி இந்திய விமானப்படையால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்னும் எண்ணிக்கையை சரியாக சொல முடியாது.
இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அரசு தெரிவிக்கும். நாங்கள் எத்தனை இடங்களை அழித்தோம் என்பதை மட்டுமே எங்களால் எண்ணி சொல்ல முடியும். இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை எங்களால் எண்ணி சொல்ல முடியாது” என தெரிவித்துள்ளார்.