சென்னை:
நெடுவாசல் பகுதியில் நடக்கும் போராட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் முழுதும் உறிஞ்சப்படும் என்றும், விவசாயம் முழுதும் பாதிப்பதோடு குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் என்றும் தெரிவித்து திட்டத்தை நிறுத்தக்கோரி விவசாயிகள் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் போராட்டக்குழுவினரின் சார்பாக 11 பேர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்களது கருத்தை வலியுறுத்தினர். அவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது. ஆகவே போராட்டத்தைக் கவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதல்வரின் கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்துள்ளனர். “எழுத்துப்பூர்வமா எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும். அல்லது அவசர சட்டம் பிறப்பித்து நெடுவாசல் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். அப்படி இல்லாதவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.