டாக்கா: நாங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை என நியூசிலாந்திலிருந்து திரும்பிய வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மகமதுல்லா ரியாத் கூறியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில், தொழுகைக்கு வந்த 49 பேர் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில், வங்கதேச கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 17 வீரர்களும் தொழுகையில் கலந்துகொள்ள பேருந்தின் மூலம் அங்கே சென்றனர்.
ஆனால், அவர்கள் அதில் கலந்துகொள்வதற்கு முன்னதாகவே, தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டதால், அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டனர். எனவே, பேருந்திலேயே இருந்துகொண்டு, ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த பாதிக்கப்பட்டவர்களை பார்த்து பயத்தில் உறைந்து அமர்ந்திருந்தனர்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கோர சம்பவத்தையடுத்து, போட்டிகள் ரத்துசெய்யப்பட்டு, வங்கதேச அணி உடனடியாக நாடு திரும்பிவிட்டது.
மிகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வந்த அவர்கள், அந்த அதிர்ச்சிகர சம்பவத்திலிருந்து தம் கவனத்தை மீட்க முயற்சி செய்துவருவதாய் கூறுகின்றனர்.
– மதுரை மாயாண்டி