சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு  நாங்கதான் தலைமை என கூறி பாஜகவுக்கு செக் வைத்தார். தமிழ்நாடு பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை நாங்கள்தான் என்று கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி நாங்கதான் தலைமை என பதிலடி கொடுத்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இப்போதே கூட்டணிக்கான ஏற்பாடுகளை தேசிய கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.  பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் 24 கடசிகளைக் கொண்ட கூட்டணி ஆலோசனை மேற்கொண்டு, தங்களது கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டிய நிலையில், டெல்லியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்துகொண்டன. இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் ஒத்த கருத்துகளை உடைய கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தல களத்தில் களம் இறங்கி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இவ்விரு பெரும் தலைவர்கள் வழியில் அதிமுக செயல்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பின்னர் செய்தியளார்களிடம்  விலைவாசி உயர்வு குறித்து பேசுகிறீர்கள். இந்தியாவின் முன்னேற்றத்தை பற்றி ஏன் சொல்ல தயங்குகிறீர்கள். பிரதமர் மோடி தலைமையில் 9 ஆண்டுகால வளர்ச்சியை பார்க்க வேண்டும். கொரோனா காலம், அதற்கு பின் உலகளவில் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை இருக்கும்போது, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை. சிறப்பான ஆட்சியை செய்து வருகிறது. பிரதமர் மோடி உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார் என்றார்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தலில் 330 இடங்களில் வெற்றுபெறும் என நம்புகிறோம் என்றவர்,  தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில்,  சிறிய கட்சி, பெரிய கட்சி பாகுபாடு இல்லாமல் பாஜக அணியில் உரிய மரியாதை உண்டு. பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துகளுடன் இருக்கின்றன. அதிமுகவின் கொள்கையில் இருந்து நாங்கள் பிறழ மாட்டோம். பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என கூறினார்

.தமிழகத்தில் பா.ஜனதாவுக்கும் அதிமுக-வுக்கும் இடையே ஒரு உரசல் போக்கு இருந்து வருவது குறித்த கேள்விக்கு, உங்களுடைய பார்வைக்கு அப்படி தெரிகிறது என்றார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் 1.5 கோடியாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 1.72 கோடி உறுப்பினராக அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு வருகிறது என்றார்.

தமிழ்நாட்டில் அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றவர்,  அதிமுகவே சிறப்பான ஆட்சியை தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது என்று கூறியதுடன், இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்றும், இதனால் ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை என்றவர்,   எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் குறித்து பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை சென்றவர்கள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாகவும், கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது திமுக தான் என்று குற்றம் சாட்டியவர், , ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார். அதனால் தான் அவர் திமுகவிற்கு முட்டு கொடுக்கிறார். கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுத்தது அதிமுக தான். குற்றவாளிகளை கண்டுபிடித்தது அதிமுகதான். ஆனால், அவர்களுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தது திமுக வழக்கறிஞர்” என குறிப்பிட்டார்.

மேலும், திராவிட கட்சிகள் இந்திய அளவில் வலுபெறுகிறதா என்ற கேள்விக்கு கூட்டணி என்பது சூழலுக்கு ஏற்றவாறு அமைப்பது. ஆனால் கொள்கை என்பது நிலையானது எனக் குறிப்பிட்டார்.

மேலும், அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, திமுக தலைமையில் இருக்கும் கூட்டணி அடிமைக் கூட்டணி. ஆனால் அதிமுக கூட்டணியில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என பதிலளித்துள்ளார்.

நெடுஞ்சாலை துறை வழக்கு தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய எடப்பாடி, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, என் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதியரசர் கடும் கண்டனத்தை தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்ததாகவும், இது நீதிக்கு கிடைத்த தீர்ப்பு என்றும் கூறினார்.