சென்னை: நாங்கள் தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் என்று தற்போது எம்.பி.க்காளக உள்ள மதிமுகவைச் சேர்ந்த  கணேசமூர்த்தி, விசிக ரவிக்குமார்  ஆகியோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.

கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கூட்டணியின் பிரதான கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இவர்கள் எந்த சின்னத்தில் வெற்றிபெறுகிறார்களோ அந்த சின்னத்திற்கு உரிய கட்சியின் கொறடாவுக்கு கட்டுப்பட்ட வர்கள்.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்  பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மதிமுக சார்பல் கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுக’வின்  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,  ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிமன்றம், மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் விழுப்புரம்  பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பு  மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொது நல வழக்கு தொடர முடியாது  என்பதால்,  தனக்கெதிரான  வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தேர்தலுக்கு முன்னதாகவே  தான் மதிமுக’வில் இருந்து விலகி திமுக’வில் சேர்ந்து விட்டடேன், அதனால் நான் திமுக உறுப்பினர் என்று  பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாரிவேந்தரும் இதுபோலத்தான் மனுத்தாக்கல் செய்திருப்பார். அது குறித்த தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விசிக, மதிமுக எம்.பி.க்களின் பதில் மனுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.