சென்னை: தமிழ்நாட்டில் 70% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை விரைவில் அடைய உள்ளோம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் 5-வது கிளையைத் தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “உலகம் முழுதும சராசரியாக ஆண்டொன்றுக்கு 1 கோடியே 86 லட்சம் பேர் இதய நோயினால் இறக்கின்றனர்,  உலகில் நடைபெறுகிற இறப்புகளில் 32 சதவிகிதம் இதய நோயினால் ஏற்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மெட்வே மருத்துவமனை பல இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றன என்றார்.

செவிலியர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களின் கோரிக்கை குறித்து குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக 4,900 செவிலியர்களைப் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்திய அளவில் தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு  8 அல்லது 9 இடத்தில் இருக்கிறது. திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, எடுக்கப்பட்ட  தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்றுவரை 5 கோடியே 29 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

18 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தியதில் 67 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் உலக சுகாதார நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளவாறு 70 சதவிகிதம் என்ற இலக்கினை தமிழகஅரசு எட்ட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.