தேவைப்பட்டால் சிரியா மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்கா அதிரடி

Must read

வாஷிங்டன்,

சிரியாவின் மீது தேவைப்பட்டால் அடுத்த தாக்குதலை நடத்தவும் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அவசரமாக கூடிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க வெளி விவகாரத்துறை அமைச்சர் ரெக்ஸ் திலேர் சன், சிரிய மக்களின் மீது, அதிப் பஷீர் அல் ஆசாத்தின் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

கடந்த செவ்வாய்க் கிழமை, மனிதர்களின் நரம்பு மண்டலங்களைப் பாதிக்கக் கூடிய விஷவாயு தாக்குதலை ஆசாத்தின் ராணுவம் சொந்த மக்கள் மீதே நடத்தியதாக குற்றம் சாட்டிய அவர், அதுபோன்ற மோசமான படுகொலைகளைத் தடுக்கவே சிரிய விமானத் தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். சிரிய விமானத் தளத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருப்பது வருத்தமளித்தாலும், தமக்கு வியப்பை ஏற்படுத்த வில்லை என்றும் ரெக்ஸ் திலேர் சன் கூறியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்திற்கு எதிராக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை, சிரியாவில், புரட்சிப் படையினர் முகாமிட்டிருக்கும் கான் ஷேக்கோன் பகுதி மீது, ஆசாத்தின் ராணுவம் விஷவாயுத் தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் 33 பெண்கள், 18 குழந்தைகள் உட்பட 89 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

சிரிய ராணுவத்தின் விஷவாயுத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், அமெரிக்க ராணுவம், விஷவாயு தாக்குதலை நடத்தப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சாய்ரத் விமானத் தளத்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்தது. சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாகவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமையும் என்றும் ரஷ்யா கூறியிருந்தது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல், சிரியா குறித்த அந்நாட்டின் கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் எதிரொலியே நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் கூறப்படுகிறது.

More articles

Latest article