பெங்களூரு:
‘‘அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்’’ என்று என்று மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெட்ஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கோப்பால் மாவட்டம் ஏல்புர்கா தாலுகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் ஆனந்த்குமார் பேசுகையில், ‘‘ மதசார்பின்மை என்று கூறுபவர்கள் பெற்றோரின் அடையாளம் மற்றும் அவர்களது ரத்த உறவு இல்லாதவர்களாக இருப்பார்கள். இஸ்லாமியர், கிறிஸ்தவர், பார்ப்பணர், லிங்காயத் அல்லது இந்து என்று அடையாளம் செய்து கொள்பவர்களை கண்டால் மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால், அவர்கள் மதசார்பற்றவர்கள் என்று கூறும் போது தான் பிரச்னை எழுகிறது. அரசியலமைப்பு சாசனம் தற்போது அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. அரசியலமைப்பை நான் மதிக்கிறேன். கடந்த காலங்களில் கால சூழ்நிலைக்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்காலத்திலும் மாற்றங்கள் ஏற்படும். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றத் தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்’’ என்றார்.
இவரது பேச்சுக்கு கர்நாடகா முதல்ர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘அம்பேத்கர் மீதான ஆர்எஸ்எஸ் கண்ணோட்டத்தை தான் மத்திய அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார். நான் அவரது நிலைக்கு இறங்கி செல்ல வேண்டியது கிடையாது. எங்களுக்கு எங்களது கலாச்சாரமும், மொழியும் தெரியும். மத்திய அமைச்சராக இருந்து கொண்டு விஷத்தை உமிழ்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு தான் ஹெட்ஜ் இது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த மாதம் ‘திப்புசுல்தான் ஜெயந்தி’ கொண்டாட கர்நாடகா அரசு அனுமதி வழங்கினால் மக்கள் விரைவில் ‘அஜ்மல் கசாப் ஜெயந்தி’ கொண்டாட தொடங்கிவிடுவார்கள் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.