வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மாபெரும் நலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை   380 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார்  1,208 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளதாகவும் கேரள அரசு தொரிவித்து உள்ளது.  இன்று 7வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம்  29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக அடுத்தடுத்து  நிலச்சரிவு ஏற்பட்டது.  இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது,   நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.

இன்று  7வது நாளாக  மீட்பு பணிகளில் தொடர்ந்து வருகிறது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது.  நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 290ஆக உள்ளது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.  ரேடார்,  டிரோன் மூலம் மீட்புப் பணிகள்  நடைபெற்று வருகிறது. முண்டைக்கை பகுதியில் 540, சூரல்மலையில் 600, அட்டமலையில் 68 வீடுகள்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வயநாடு நிலச்சரிவு, வெள்ளத்தில் மொத்தம் 1,208 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத பாறைகள் மற்றும் பெரிய மரங்கள் கட்டிடங்களை நொறுக்கி விட்டன. அவற்றை பெரும்பாடுபட்டு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அகற்றி தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். மண்ணில் புதைந்துள்ள உடல்களை அதிநவீன ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் கரையின் ஓரமாகவும், தண்ணீர் ஓடும் பகுதிகளிலும் ட்ரோன்களை பறக்கவிட்டு தேடுதல் பணி முன்னாள் மேஜர் இந்திரபாலன் தலைமையில் சிறப்பு தேடுதல் பணிகுழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன. அவையும் பலத்த சேதமடைந்த நிலையில் தான் உள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,208 வீடுகள் முற்றிலுமாக இடிந்து அழிந்துவிட்டது.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரிகளே, இப்படியொரு பேரழிவை பார்த்ததில்லை என்று கூறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்திருக்கிறது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே, மீட்பு பணியின் போது அந்த பகுதிகளில் உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்புப் பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.