சென்னையில் நேற்று திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் இன்று செவ்வாய் காலை 8 மணி வரை 6.9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடசென்னையில் உள்ள எண்ணூரில் அதிகபட்ச மழையும், அதைத் தொடர்ந்து மணலி, கொளத்தூர் மற்றும் பிற பகுதிகளில் மழையும் பதிவாகியுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எண்ணூரில் 10 செ.மீ மழையும், மணலி மற்றும் கொளத்தூரில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை ஒரு மணி நேரத்தில் அய்யப்பாக்கம் பகுதியில் 3.3 சென்டிமீட்டர் மழையும், அதைத் தொடர்ந்து ஆலந்தூர் மண்டலம் முகவிளக்கத்தில் 3.09 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் (ஐசிசிசி) தெரிவித்துள்ளது.
கனமழையால் கொளத்தூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பருவமழை தொடர்பான பிரச்னைகளை கையாளவும், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கான பணிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில் நகரின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்ற சென்னை மாநகராட்சி பணியாளர்களை நியமித்துள்ளது.
இருந்தபோதும் பல இடங்களில் நீரை வெளியேற்ற முடியாமல் திணறி வருவதால் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் மாநகராட்சியின் நடவடிக்கைகளை நம்பி அங்கேயே வீடுகளுக்குள் இருந்த மக்கள் தொடர்ந்து மழை பெய்து வருவதை அடுத்து வீடுகளை விட்டு வெளியேற துவங்கியுள்ளனர்.