சென்னை: முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது, ஆனால், மழைநீர் வடிந்துவிட்டது என அமைச்சர்கள் மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

மழை காரணமாக, சென்னை புளியந்தோப்பில் வீடு இடிந்த விபத்தில் பலியான பெண் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மழை காரணமாக,  சாந்தி மீது பால்கனி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தும் இரண்டு மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சாந்தியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். அவசர காலத்திற்கு கூட உதவ முடியாமல் தான் மருத்துவத்துறை உள்ளது என்றவர், இந்த மரணம் தொடர்பாக மாநகர மேயரோ, எம்.எல்.ஏ உட்பட யாரும் ஆறுதல் சொல்ல கூட வரவில்லை என்றவர், அரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை. தான் அவர்கள் குடும்பத்துக்கு  25 ஆயிரம் நிவாரணம் கொடுத்துள்ளேன் என்றார்.

சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வடசென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது.  ஆனால், அதிகாரிகளும், அமைச்சர்களும், மழை நீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர் என்றவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடாத ஊடக நிறுவனங்களை திமுக அரசு மிரட்டுகிறது என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், அதிமுகவை பாஜக இயக்குகிறதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய ஜெயக்குமார், அதிமுகவை  இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. அதிமுகவை பொறுத்தவரை தற்போது பிரதான எதிர்கட்சிதான். நாளைக்கு ஆளுங்கட்சி என்றால் அதிமுகதான். தேர்தல் சமயத்தில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று கூறினார்.

திமுகவுடனான உறவு தொடர்பான கேள்விக்கு, திமுகவுடன் அண்ணன் தம்பி உறவு எல்லாம் 1972ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. திமுக எப்போதும் எங்கள் பகையாளிதான் என்று காட்டமாக கூறினார்.

முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் பலரும் தூங்க விடாமல் செய்கின்றனர். பல ஜனநாயக விரோத செயல்களை செய்கின்றனர். கே.என்.நேரு அதிகாரிகள் மத்தியஅரசுக்கு பயப்படுகிறார்கள் என புலம்பிக்கொண்டிருக்கிறார். அப்போது இருந்து இப்போது வரை அதே அதிகாரிகள்தான்.  அதிகாரிகளை வைத்துதான் வேலை வாங்க வேண்டும். தற்போது உள்ள அரசுக்கு வேலை வாங்கத் தெரியவில்லை என்று குற்றம் சாட்டியவர், நிர்வகத்திறமையில்லாத மோசமான திராவிட மாடல் ஆட்சிதான் இந்த திமுக ஆட்சி என்றும் ஜெயக்குமார் சாடினார்.