சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அடையாற்றில் திறந்துவிடப்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 9 ஆயிரம் கனஅடி திறந்துவிடப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் அளவு 1500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியாதால், நேற்று மதியம் முதல் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆரம்பத்தில் 100கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் அடையாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நள்ளிரவு புயல் கரையை கடந்துள்ளதால், தொடர்ந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதிகாலை 5ஆயிரம் கனஅடனயாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 1500 கனஅடியாக மேலும் குறைக்கப்பட்டு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.85 அடியாக உள்ளது. அதிகாரிகள் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை கண்காணித்து வருகின்றனர்.