தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, நடப்பு ஆண்டில் முதன்முறையாக பவானி சாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. தென்மேற்கு பருவமழை முடிவடைந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் முதன்முறையாக 100 அடியை பவானிசாகர் அணை எட்டியுள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி, அணையின் நீர் இருப்பு 28.76 டி.எம்.சியாக உள்ளது. நீர்வரத்து 16,534 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 1,300 கன அடி நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.